Friday, 10 February 2012

கடந்த 20 வருடங்களில்

கடந்த 20 வருடங்களில் அரசுக்கு சொந்தமாக புதிய மின் நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. மின்சார உற்பத்தி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. தனியார் மின் நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப் பட்டது. நம் மின்சாரத்துறை கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

விரிவாகச் சொல்வதானால் 1994-95 இல் தமிழக அரசின் உற்பத்தி, மொத்த தமிழகத் தேவையில் 65%ஆக இருந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மீதமுள்ள 34.5% பெறப்பட்டது. தனியாரிடம் இருந்து வெறும் 0.5% மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த காலங்களில் வருவாய் மின்சார வாரியத்திற்கு அதிகமாகவும், உபரியாகவும் இருந்த்து. இதைக் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வர இயன்றது. மேலும் விவசாயம், குடிசைகள், நலிவடைந்த தொழில்களுக்கு சலுகையாக அளிக்கவும் முடிந்தது. 1994ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்த சமயத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸின் மன்மோகன்சிங், மாண்டெக் சிங்கின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தமிழ்நாடு மின்சார வாரியம்( அனைத்து மாநிலங்களுக்கும் இதே கதிதான்) சுயமாக மின் உற்பத்திச் செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக தனியாரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் 1994இல் 3858 கோடி ரூபாய் இலாபம் ஈட்டிய மின்சாரவாரியம் 2001இல் ரூ4851 கோடி நட்டத்தை சந்தித்தது. மேலும் மின்சாரத்தேவை 1994 இல்(29075 மில்லியன் யூனிட்) இருந்ததைப் விட 2007இல் தேவை 100% (66,815 மில்லியன் யூனிட்) உயர்ந்தது (இருமடங்காகியது). மாநில அரசு சுயமாக மின் உற்பத்திச் செய்யப்படுவதை தடுத்த மத்திய அரசு, தான் பங்களிக்கும் மின்சாரத்தை வெறும் 50% மட்டுமே உயர்த்தியது. 1994இல் வெறும் 0.5% மின்சாரம்(122 மில்லியன் யூனிட்) உற்பத்திச் செய்த தனியார் நிறுவனங்கள், 2007இல் 50%ஆக ( 23,924 மில்லியன் யூனிட்) மின் உற்பத்தியை செய்ய ஆரம்பித்தது.

இதன் மூலம் மாநில மின்சார வாரியம் தனியார் உற்பத்தியை சார்ந்து நிற்க மறைமுகமாக கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசு தனது கடமையை கைகழுவி, மின்பகிர்மானம்-உற்பத்திக் கட்டுப்பாட்டை தன் கையில் கொண்டு வந்தது.அதாவது மாநில அரசு தனது இறையாண்மையை இழந்தது. இதனடிப்படையிலேயே நாம் கூடன்குளம்-கல்பாக்கம் அணு மின் உற்பத்தியையும் பார்க்க முடியும். இது மத்திய அரசின் உற்பத்தி திட்டம். இதன் மூலம் மத்திய அரசு மேற்குலக நாடுகளுக்கு ஒப்பந்தமிட்டு தனியாரை ஊக்குவிக்கிறது. மேலும் அணு ஒப்பந்ததில் பெரும் பணத்தை இலஞ்சமாக பெறவும் வழிவகை செய்கிறது. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கோ, அதன் மக்களுக்கோ அளிக்கப்பட போவதில்லை. இது தனியார் நிறுவன்ங்களுக்கும், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படப்போகிறது.

இந்த மக்கள் விரோத தனியார்-மின்வாரிய ஒப்பந்தங்களை நடைமுறைபடுத்த உயர் நீதிமன்றத்தின் வழியாக மக்களோ, ஆர்வலர்களோ, இயக்கங்களோ தலையிடாமல் இருக்க மின்சாரத்திற்கென ஒரு நீதிமன்றம் பாணியிலான (பஞ்சாயத்து) ஒரு மன்றம் "ஒழுங்குமுறை ஆணையம்" என்கிற பெயரில், புதிதாக இயற்றப்பட்ட "மின்சார ஒழுங்கு சட்டம் " இயற்றப்பட்ட்து. இவை அனைத்தும் தனியாரிடம் உற்பத்தியை அளிப்பதும், மாநில அரசுகள் மின் உற்பத்தியை செய்வதை தடுத்து மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை தனியாரின் நலனுக்க்கு ஏற்ப அளிக்கச் செய்வதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. உலகமயமாக்கலை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்த காங்கிரஸ்-மன்மோகன் மேற்குலக அரசின் திட்டத்தின் படி இதை செய்தார்கள். இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மின் உற்பத்தியும், மின்சார கொள்முதல் விலை நிர்ணயமும் இருக்காமல் வழிவகை செய்தது மத்திய அரசு. இதனால் மா நில அரசுகள் சலுகை விலையில் மின்சாரம் விவசாயம்-குடிசை போன்றவர்களுக்கு அளிப்பதை தடுக்க இயலும்.

மேல்சொன்ன அனைத்து நட்டத்தையும் சாத்தியப்படுத்துவதற்காக வேலை செய்ய வழி வகுத்தது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்த ஆணையம் தனியாருக்கும்-மின்சார வாரியத்திற்கும் உண்டான வழக்குகளில் தனியார் நிறுவன்ங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பெரும் தொகையை பெறுவதற்கு ஏதுவாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் வருட்த்தில் 330 நாட்களும் இயங்காமல் செயல்பட்ட தனியார் நிறுவன்ங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை மின்சார வாரியத்திடமிருந்து பெற முடிந்தது. தனியார் காற்றாலைகளுக்கு ஏதுவாக வருடந்தோரும் 600 கோடி ரூபாய் நட்ட்த்தை மின்சார வாரியத்திற்கு உருவாக்கியது இந்த ஒழுங்குமுறை வாரியம். சாஃப்டுவேர் நிறுவனங்கள் கேட்காத போதும் கூட, இந்த நிறுவனங்களுக்கு கட்டணச் சலுகையும் அறிவித்தது. இதை விட உச்சகட்டமாக 189 கோடி ரூபாய் கேட்டு மின்சார வாரியத்தின் மீது வழக்கு தொடர்ந்த பி.பி.என் என்கிற நிற்வனத்திற்கு கிட்ட்தட்ட 1050கோடி ரூபாய் நட்ட ஈட்டை வழங்கச் சொல்லி உத்திரவிட்ட்து இந்த ஆணையம். இவ்வாறு இதுவரை கிட்ட்தட்ட 53,298 கோடி ரூபாய் நட்டத்தை உருவாக்கி இருக்கிறது. .

முன்னர் இதே போல தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும், சாஃப்டுவேர் நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் மற்றும் முன்பிருந்த விலையிலிருந்து குறைத்து மின்சாரத்தைக் கொடுத்த காரணத்தால் நம் மின்சாரத்துறைக்குக் கடுமையான கடன்சுமை ஏற்படுத்தப் பட்டது.
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மின்சார விலையில் அளித்த சலுகையின் காரணமாகக் கிட்டதட்ட ரூ.50 ஆயிரத்து 512 கோடியை நம் மின்சார வாரியம் இழந்துள்ளது. அந்த இழப்பினைப் பொதுமக்களான நம்மிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதன் படி நமது மின்சார கட்டணம் இரண்டு மடங்காக உயரப்போகிறது.
மின்வாரியத்தின் மொத்த இழப்பீட்டில் வெறும் ரூ.9741 கோடி ரூபாயை வசூலிக்கவே நம் மின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தப் போகிறார்கள். மீதமுள்ள ரூ.40771ஆயிரம் கோடியை வரும் ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். அப்போது, அடுத்து வரும் ஆண்டுகளில் நம் மின் கட்டணம் எத்தனை மடங்கு அதிகரிக்கப் போகிறது என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வளவுக்கும் காரணம் யார்?
மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ்- மன்மோகன் கூட்டனியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல்லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மின்சாரத் துறையிடமிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்பதாலும், மிகச்சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க வேண்டி நம்மிடம் பணம் வசூலித்தது போதாதென்று, அவர்களுக்காகத் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக நம் உடைமையையும், உயிரையும், நிலத்தையும், சந்ததிகளையும் அழிக்க வல்ல கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்கள் போன்ற மின் நிலையங்களை அமைப்பதற்கும் இந்த வாரியமும், அதனை அமைத்த மத்திய அரசும் முழு முயற்சி செய்து வருகின்றன.
2010 ஆண்டில் மென்பொருள் நிறுவனங்களுக்கு (சாஃப்டுவேர் நிறுவனங்கள்) யூனிட் ஒன்றுக்கு 2.50 ரூபாய் சலுகையை இந்த வாரியம் அளித்தது. இவ்வாறு குறிப்பிட்ட சில துறைகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகைகள வாரி வழங்கி வழங்கியே நம் மாநிலத்தின் மின்சாரத்துறையை அது மீழாக் கடனில் தள்ளியுள்ளது. உலகமயமாக்கல், தனியார்மயம், தொழில் துறையில் 10% வளர்ச்சி என்று பேசி பேசியே இன்று பிறரின் சுமையை இந்த வாரியம் நம் தலையில் ஏற்றி வைத்துள்ளது.
இந்த வாரியத்தை அமைத்த மத்திய அரசோ, கூடங்குளம்,கல்பாக்கம் அணு மின் நிலையங்களை நம் தலைமுறையை அவை அழிக்கும் என்று தெரிந்தே தனியாருக்கு மின்சாரம் வழங்க வேண்டுமென்பதற்காக நம் மீது திணிக்கின்றது.